தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென்பெண்ணை- செய்யாறு இணைக்கப்படும்; விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் க.பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென்பெண்ணை- செய்யாறு இணைக்கப்படும் என்று விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் தி.மு.க. துணைப்பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2020-12-07 06:32 GMT
விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொது செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ
விடியலைநோக்கி ஸ்டாலினின் குரல்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் காலையில் ஆவூர் கிராமத்தில் பாய்முடையும் தொழிலாளர்களுடனும், கீழ்பென்னாத்தூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுடனும், மாலையில் மங்கலம் கிராமத்தில் விவசாயிகளுடனும் கலந்துரையாடல் நடைபெற்றது.

தொடர்ந்து நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் குப்பநத்தம், செய்யாறு பாசன விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கீழ்பென்னாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நாயுடு மங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் பெ.சு.தி. சரவணன் வரவேற்று பேசினார்.

இதில் தி.மு.க. துணைப்பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தென்பெண்ணை- காவிரி இணைப்பு
பெண்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளை வழங்கியது தி.மு.க. ஆட்சிதான். சுய உதவிக்குழு மீண்டும் உயிர் பெற வேண்டுமென்றால் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க. ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது தி.மு.க. ஆட்சியில்தான்.

தமிழகத்தில் நதிகளை இணைக்க ஒட்டுமொத்த விவசாயிகளும் குரல் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆந்திராவிலுள்ள கோதாவரி, தமிழகத்திலுள்ள காவிரியை இணைக்கவாவது முன்வர வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு, செய்யாறு இணைப்பு தி.மு.க. ஆட்சி வந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

எனவே வருகிற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வராக வர நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருவண்ணாமலை
நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட துணை செயலாளர் பாரதி ராமஜெயம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, நகர செயலாளர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில், திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள வன்னியர் மகாலில் வணிகர்களுடனும், காட்டாம்பூண்டி வள்ளிமலை கிராமத்தில் கரும்பு 
விவசாயிகளுடனும், திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள தூய்மை அருணை அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களுடனும், திருவண்ணாமலை- திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பொதுமக்களுடனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்