கல்லேரி கிராமத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமான ஊராட்சி ஒன்றிய பள்ளி; வகுப்பறையில் சமைத்து சாப்பிடும் அவலம்
கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவள நிலை வகுப்பறைகளை அசுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
சமூக விரோதிகளின் கூடாரமாக...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கல்லேரி ஊராட்சி. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்ட்டிருப்பதால் இங்கு மாணவர்கள் வருவது இல்லை.
ஆனாலும் பள்ளி திறந்த நிலையிலேயே உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் பள்ளியின் வகுப்பறையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு, கழிவுகளை அங்கேயே கொட்டி வருகின்றனர். மேலும் அசுத்தம் செய்தும் வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் மர்மநபர்கள் இரவு நேரங்களில் இங்கு தங்கி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வகுப்பறை எப்போதும் திறந்த நிலையில் இருப்பதால் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
பள்ளியின் வகுப்பறை கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பள்ளியை பூட்டி பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.