கொரோனா சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்; சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தகவல்

கொரோனா சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.

Update: 2020-12-07 05:01 GMT
தொடர் மழை
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’, ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் ஆறு, ஏரி, குளம், அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையினால் தாழ்வான பகுதிகள், வீட்டை சுற்றியுள்ள காலிஇடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்மூலம் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்களில் காணப்படும் மழைநீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். மழையினால் பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்படுவதை தடுக்க கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்களில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையுடன் காய்ச்சல் பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 25 மருத்துவக்குழுவினர் மாவட்டத்தில் 45 முதல் 50 இடங்களில் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை கூடுதலாக காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளும்படி தெரிவித்து உள்ளோம்.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளலாம். லேசான காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு மாத்திரை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்