வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறப்பு: 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாடி திட்டுவெளி கிராமம் தனித்தீவாக மாறியது.

Update: 2020-12-07 02:11 GMT
கடலூர்,

வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கால்நடைகளும் பலியாகி உள்ளன. 20 ஆயிரம் கோழிகள் செத்தன. தொடர்ந்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று 5-வது நாளாக மழை பெய்தது. இருப்பினும் காலை 10 மணி அளவில் திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. இந்த வெயில் 30 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது. இருப்பினும் கடந்த 4 நாட்களுக்கு பிறகு தான் சூரியனை பார்க்க முடிந்தது. தொடர் மழையால் ஏற்கனவே வீடுகளிலும், வீடுகளை சுற்றிலும் நிற்கும் தண்ணீர் வடியவில்லை. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

பெருமாள் ஏரி

தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர் மழையால் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. இதற்கிடையில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆனாலும் ஏரி, அணைக்கட்டுகளை பாதுகாப்பதற்காக தண்ணீரின் இருப்பு அளவை அதிகாரிகள் குறைத்து வருகின்றனர். இதனால் ஏரி, அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரால் நகர, கிராமப்புறங்களிலும் மேலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதேபோல் குறிஞ்சிப்பாடி அருகே பெருமாள் ஏரி நிரம்பியதால், ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 6 ஆயிரத்து 257 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீராலும், தொடர் மழையாலும் கீழ்ப்பகுதியான கள்ளையங்குப்பம் ஊராட்சி திட்டு வெளி கிராமத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவாக மாறி உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் அத்தியாவசிய தேவைக்காக தண்ணீரில் நீந்தி மெயின் ரோட்டுக்கு வருகின்றனர். கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், திட்டுவெளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தங்களது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொத்தவாச்சேரி கிராமம் வழியாக குறிஞ்சிப்பாடிக்கு வந்து சென்று வந்தனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொத்தவாச்சேரி-குண்டியமல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தற்போது குள்ளஞ்சாவடி வழியாக 25 கிலோ மீட்டர் சுற்றி குறிஞ்சிப்பாடி வந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்மழையால் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள த.பாளையம் ஊராட்சியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மணிலா, கரும்பு வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கரும்புகள் சாய்ந்து கிடக்கிறது. இதைபார்த்து கவலையடைந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வினாடிக்கு 1,500 கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதனால் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரும், மணவாய்க்கால் மழைத்தண்ணீரும் வீரநத்தம் என்ற பகுதியில் கலந்து செல்வதால் வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக வெள்ளியங்கால் ஓடை கரையோர கிராமங்களான 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேலும் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு வினாடிக்கு 64 கன அடி தண்ணீரும், லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 1,500 கன அடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் திருநாரையூர் கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில் 4-வது நாளாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை சுற்றியுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 53.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த பட்சமாக காட்டுமயிலூரில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தேங்கி நிற்கும் மழைநீர்

சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பெய்த தொடர்மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அண்ணாமலை நகர்-முத்தையா நகர் பாலம் அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அண்ணாமலைநகர் பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தசாமி நகர், மாரியப்பா நகர், ஆட்டா நகர், புகையிலைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதுதவிர சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் சிதம்பரம் அரசு கால்நடை மருத்துவமனை, கிள்ளை-பிச்சாவரம் சாலையில் எடப்பாளையம் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை சுற்றி குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் கால்நடை மருத்துவமனைக்கு செல்லமுடியாமலும், அங்கன்வாடி மையம் திறக்கப்படாமலும் உள்ளது.

மேலும் செய்திகள்