கிள்ளையில் நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கிள்ளையில் நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-07 02:05 GMT
அண்ணாமலை நகர்,

புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மிதந்தது. ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. இந்த நிலையில் சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்திலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பல வீடுகளில் மின்சாரம் தடைபட்டது. குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராம மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில் தண்ணீர் சூழ்ந்த இக்கிராமத்திற்கு அடிப்படை வசதி கோரியும், அதிகாரிகள் யாரும் வந்து நிவாரண பணிகளில் ஈடுபடாததை கண்டித்தும், நிவாரணம் வழங்கக்கோரியும் குச்சிப்பாளையம் கிராம மக்கள் நேற்று காலை கிள்ளை சோதனைச் சாவடி அருகே மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நடவடிக்கை

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல், வருவாய் ஆய்வாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதன்பின்னர் கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல், வருவாய் ஆய்வாளர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்