புயலில் சேதமான படகுகளை மராமத்து செய்ய பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க வேண்டும்; மீனவர்கள் கோரிக்கை

புயலில் சேதமான படகுகளை மராமத்து செய்ய வேண்டி உள்ளதால் பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-12-07 01:59 GMT
பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து வருவதற்காக கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடிவிசைப்படகுகள்
புரெவி புயல்
வங்கக்கடலில் உருவாகியிருந்த புரெவி புயல் சின்னம் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது புரெவி புயலானது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிட்டது. இதனால் ராமேசுவரம் பகுதியில் கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இந்த நிலையில் புயல் ஓய்ந்து ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க மீன்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

படகுகள் சேதம்
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசு ராஜா கூறியதாவது:- புயல் சின்னம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிட்டது. இதனால் ராமேசுவரம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. புயலால் படகுகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக பாம்பன் குந்துகால் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 விசைப்படகுகள் நங்கூர கயிறுகள் அறுந்து படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி பலத்த சேதம் அடைந்து உள்ளன.

இந்த படகுகளை ராமேசுவரம் பகுதிக்கு கொண்டு வந்து மராமத்து பணிகள் செய்ய வேண்டி உள்ளதால் இந்த மீன்பிடி விசைப்படகுகள் கடந்து வருவதற்கு பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணம்
அதுபோல் புயலால் சேதமடைந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும். புயல் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் நாளைமறுநாள் (புதன்கிழமை) முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்