அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சர் வீடு அருகே திடீர் சாலை மறியல்

மின்தடையை கண்டித்து முதல்-அமைச்சர் வீட்டின் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-07 00:49 GMT
புதுச்சேரி,

யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையொட்டி புதுச்சேரியில் இதற்கான பணிகள் தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழுவை உருவாக்கி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4-ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக பல இடங் களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதை கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை, வம்பா கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலையிலும் இது தொடர்ந்தது. இது குறித்து புகார் தெரிவித்தும் மின்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோனாம்பாளையம் சந்திப்பில் கூடினர்.

உடனடியாக தங்களது பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் கிடந்த மரக் கிளைகள், டெலிபோன் கம்பங்களை இழுத்து சாலையில் போட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இந்தநிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வும் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளருமான அன்பழகன் அங்கு விரைந்து சென்றார். அவரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் சேர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர் வலமாக சென்றனர். சோனாம்பாளையத்தில் இருந்து புஸ்சி வீதி, எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பை அடைந்தனர்.

அங்கு அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மாறன், மின்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி விட்டு இன்னும் சிறிது நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்து இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார். அதை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

முதல்-அமைச்சர் வீடு முன் நடந்த மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்