பத்துக்கண்ணு, பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம் வழியாக ஊசுடு ஏரிக்கு வந்த வாய்க்கால் தண்ணீரில் குளித்த இளைஞர்கள்
பத்துக்கண்ணு, பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம் வழியாக ஊசுடு ஏரிக்கு வந்த வாய்க்கால் தண்ணீரில் ‘டைவ்’ அடித்தும் ‘டியூப்’களில் மிதந்தும் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
திருக்கனூர்,
நிவர், புரெவி புயலால் பலத்த மழை பெய்ததையொட்டி தமிழக பகுதியில் உள்ள வீடூர் அணை நிரம்பியதையடுத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து புதுவை பகுதியான மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு தமிழகப் பகுதியான திருவக்கரைக்கு வந்து சுத்துக்கேணி, குமாரப்பாளையம், செல்லிப்பட்டு, வில்லியனூர், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு கடலில் தண்ணீர் கலக்கிறது.
சுத்துக்கேணி பகுதியில் பெரிய வாய்க்கால் மதகுக்கு வரும் சங்கராபரணி தண்ணீர் காட்டேரிக்குப்பம், பூமிமுடக்கு, பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், பத்துக்கண்ணு வழியாக ஊசுடு ஏரிக்கு செல்கிறது. ஊசுடு ஏரி நிரம்பிவிட்டால் அதே வாய்க்கால் வழியாக மீண்டும் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு பத்துக்கண்ணு வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஊசுடு ஏரியில் நிரம்பும் தண்ணீர் ஏரியில் உள்ள 2 மதகுகள் வழியாக வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களுக்கு திறந்துவிடப்படும். இதேபோல் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருந்து உழந்தை ஏரிக்கு செல்லும் வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்கிறது.
சுத்துக்கேணி பகுதியில் உள்ள படுகை அணை மூலம் வெளியேற்றப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க சுத்துக்கேணி பெரிய வாய்க்கால் மதகு வழியாக ஊசுடு ஏரியில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
‘டைவ்’ அடித்தும் ‘டியூப்’களில் மிதந்தும் மகிழ்ந்தனர்
திருக்கனூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து சங்கராபரணி ஆற்றுப்படுகை அணைகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து ரசிப்பதுடன் ‘செல்பி’யும் எடுத்துக்கொள்கிறார்கள். சங்கராபரணி ஆற்றில் இருந்து சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பம், கூனிமுடக்கு, பிள்ளையார்குப்பம், பத்துக்கண்ணு, ராமநாதபுரம் வழியாக ஊசுடு ஏரிக்கு வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீரில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். கனரக வாகன ‘டியூப்’களில் காற்று நிரப்பி அதில் மிதந்தபடியும், உயரமான பகுதிகளில் இருந்து ‘டைவ்’ அடித்தும் நீச்சல் அடித்து திளைத்தனர். மேலும் சிலர் பல இடங்களில் தூண்டில் வைத்து மீன்பிடித்தும் வருகிறார்கள்.