புதிய கட்சி தொடங்குவதாக அறிவிப்பு: ‘அண்ணாத்த’ படம் ஓடுவதற்காக ரஜினி போடும் நாடகம்; நாஞ்சில் சம்பத் பேட்டி
“புதிய கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினி அறிவித்து இருப்பது ‘அண்ணாத்த‘ படம் ஓடுவதற்காக போடும் நாடகம்“ என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
கருத்தரங்கம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நீதி பாதுகாப்பு தின கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அலிப் பிலால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை தலைவர் ஹமீது, சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதிதமிழர் பேரவை மாவட்ட தலைவர் கண்ணன், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்றொரு முகம்
பாரதீய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாக நடிகர் ரஜினிகாந்தை அரசியலில் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். வருகிற 31-ந் தேதி புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வரும் என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை உயிருக்கு மேலாக நேசித்து அவரது நற்பணி மன்றத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் நிர்வாகியை, தனது கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க அவருக்கு மனமில்லை. அவர், பாரதீய ஜனதா கட்சியில் இயங்கி கொண்டிருந்த ஒருவரை தனது கட்சிக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.
‘அண்ணாத்த‘ படம்
ஒரு கட்சிக்கு மேற்பார்வையாளரை நியமித்தது ரஜினிகாந்த் மட்டும்தான். அவர் கட்சி தொடங்குவதாக கூறுவது அவரது ‘அண்ணாத்த’ படம் ஓடுவதற்காக போடும் நாடகம்.
இவ்வாறு அவர் கூறினார்.