கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது பெங்களூரு விதானசவுதாவில் ஏற்பாடுகளை சபாநாயகர் காகேரி ஆய்வு செய்தார்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் லவ் ஜிகாத், பசுவதை தடை சட்டங்களை நிறைவேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே கூட்ட ஏற்பாடுகளை பெங்களூரு விதானசவுதாவில் சபாநாயகர் காகேரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் நடப்பு ஆண்டுக்கான கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ந்தேதி (அதாவது இன்று) தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் சட்டசபை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவதால், முந்தைய கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த தொடரிலும் பின்பற்றப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு விதானசவுதாவில் உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு மத்தியில் கண்ணாடி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க வரும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், மேல்-சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், சானிடைசர் வழங்குவது போன்ற நடைமுறைகள் பின்பற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சபாநாயகர் காகேரி, விதானசவுதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டசபை ஏற்பாடுகளையும், கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகளையும் நேற்று நேரில் பார்வையிட்டார். உறுப்பினர்களின் இருக்கைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி தடுப்புகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும் அதிகாரிகளிடம் ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
கடந்த முறை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகி, வைரஸ் தொற்று இல்லை என்று சான்றிதழை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பது காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல் லவ் ஜிகாத் என்னும் கட்டாய மதமாற்ற திருமண சட்டத்தை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளன. மேலும், வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு அரசு சரியான முறையில் நிவாரணம் வழங்காதது குறித்து பிரச்சினை கிளப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் தெரதால் தொகுதியில் பெண் கவுன்சிலர் மீது பா.ஜனதா எம்.எல்.ஏ. நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. இது தவிர இன்னும் பல்வேறு மக்கள் நல பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைக்கு தக்க பதிலடி கொடுக்கவும் அரசு தயாராகியுள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு பெங்களூரு விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் எந்த வகையான போராட்டம் நடத்தவும் அனுமதி இல்லை.