முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சந்திப்பு மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்

முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-12-06 23:42 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் தனது மந்திரி சபையை மாற்றி அமைக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அதாவது மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப அனுமதி வழங்குமாறு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை எடியூரப்பா நேரில் சந்தித்து அனுமதி கேட்டுள்ளார். 3 நாட்களில் முடிவு தெரிவிப்பதாக கூறிய ஜே.பி.நட்டா, 20 நாட்கள் ஆகியும் இன்னும் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா அதிருப்தியில் உள்ளார்.

மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கான வாய்ப்பும் தற்போது இல்லை என்று தெளிவாகியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அருண்சிங் நேற்று பெங்களூரு வந்தார். மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்த அவரை கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பிறகு அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பாரத மாதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், உணவுத்துறை மந்திரி கோபாலய்யா, பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு பெலகாவியில் நடைபெற்ற பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டங்களில் அருண்சிங் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பாவை காவேரி இல்லத்தில் அருண்சிங் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு எடியூரப்பா மதிய விருந்து வழங்கினார். அதன் பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களில் 5-ஐ நிரப்ப பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எம்.எல்.சி.க்கள் சி.பி.யோகேஷ்வர், எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினால் அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. அதனால் அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடிய எம்.எல்.ஏ.க்களை முதலில் சமாதானம் செய்துவிட்டு அதன் பிறகு மந்திரிசபை விரிவாக்கத்தை மேற்கொள்ள மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு சிக்கலை தீர்க்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்