காட்டாவூர் கிராமத்தில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை
காட்டாவூர் கிராமத்தில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நிலம் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.
இதே கிராமத்தை சார்ந்த ஒருவர் கோர்ட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் 2018-ம் ஆண்டு அகற்றப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் சிலர் 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நெற்பயிர் நட்டனர்.
நிலம் மீட்பு
தகவலறிந்த பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் மண்டல துணை தாசில்தார் உமாசங்கரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
பின்னர் அந்த நிலத்தை கால்நடை பராமரிப்புத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.