ஓலைப்பாடி காகித ஆலையை உடனடியாக திறக்க கோரிக்கை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வேப்பூர் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் குன்னத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.
மங்களமேடு,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வேப்பூர் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் குன்னத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முருக்கன்குடி கிளை செயலாளர் சின்னப்பொண்ணு தலைமை தாங்கினார். நிர்வாகி தனலெட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் கலையரசி, மாவட்ட செயலாளர் பத்மாவதி, வசந்தா மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாதர் சங்க மாநில துணை செயலாளர் கீதா கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயத்திற்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளை தாக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை வாய்ப்பை 200 நாட்களாக்கி ரூ.256 சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும். வேப்பூர் ஒன்றியத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வங்கி மூலம் கறவை மாடு கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓலைப்பாடியில் மூடிக் கிடக்கும் காகித ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கார்குடி கிளை தலைவர் ஜெயா நன்றி கூறினார்.