சென்னையில் இன்று கல்லூரிகள் திறப்பு: பஸ்களில் அராஜகம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை; வீடியோ வெளியிட்டு, போலீஸ் இணை கமிஷனர் எச்சரிக்கை
சென்னையில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. பஸ்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அராஜகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை வீடியோ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடிக்கிடந்த கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகள் திறக்கப்படுகிறது. இதுநாள் வரை வீட்டுக்குள் முடங்கி கிடந்த மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டம் என்ற போர்வையில் தகராறில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தில் வட சென்னை இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ காட்சியில் அவர் பேசியிருப்பதாவது:-
பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்கள் தல என்ற பெயரில் மாணவர்களை கூட்டமாக சேர்த்துக்கொண்டு, கூரையில் பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கும் சரி, மாணவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோதிகளுக்கும் சரி காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது.
இடையூறு செய்யக்கூடாது
பஸ்சில் பயணம் செய்யும் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. மாணவர்கள் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் இது தொடர்பாக உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஆசிரியர்களும், கல்லூரிக்கு வருவதற்கு முன்பே மாணவர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்க வேண்டும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப்பதிவு செய்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
எனவே இதுபோன்ற செயல்களை தவிர்த்து, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
மாணவர்கள் பஸ்களில் வரும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் தகராறு ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பஸ் தின கொண்டாட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.