பள்ளிக்கரணையில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவதால் மாடி வீடுகளில் மக்கள் தஞ்சம்
பள்ளிக்கரணையில் கடந்த 4 நாட்களாக வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பாம்புகள், விஷப்பூச்சுகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் அச்சம் அடைந்த பொதுமக்கள், குழந்தைகளுடன் மாடி வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் புறநகரில் உள்ள பல ஏரிகள் நிரம்பின. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஆயிரம் வீடுகளை சுற்றிலும் கடந்த 4 நாட்களாக மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பாம்புகள் படையெடுப்பு
தேங்கி நிற்கும் மழைநீரில் ஆகாய தாமரைகளும் படர்ந்து உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் படையெடுத்து வருவதாகவும், இரவு நேரங்களில் அவை வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் கீழ் தளத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயந்துபோய், தங்கள் குழந்தைகளுடன் இரவு நேரங்களில் மாடி வீடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
பள்ளிக்கரணையின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால்வாய் பணி பாதியில் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.