தமிழகத்தில் 27-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டி
தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
நாமக்கல்,
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை நீக்குமாறு பலமுறை அரசுக்கு மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்பதால், வருகிற 27-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இதுகுறித்து சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஒளிரும் பட்டை ஒட்டுவதில் சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி பழைய நிலையே தொடர வேண்டும்.
ஜி.பி.எஸ். கருவியை பொறுத்தவரையில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உற்பத்தியாளர்களே வாகனத்தில் பொருத்தி அனுப்புகிறார்கள். ஆனால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்வது இல்லை. குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ். கருவியை வாங்கி பொருத்தினால் மட்டுமே தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க முடியும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.
எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்தும் வருகிற 27-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அவ்வாறு எங்களது போராட்டம் தொடங்குமானால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் வேலைநிறுத்தம் தொடங்க இன்னும் 21 நாட்கள் உள்ளன. அதற்குள் அரசு எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகதீர்வு காண முன்வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் மற்ற மாநிலங்களை போல தமிழக அரசும் டீசல் விலையை குறைக்க வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் 10 மாநிலங்கள் காலாண்டு வரியை ரத்து செய்து உள்ளன. தமிழக அரசும் காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். வட மாநிலங்களில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தார்மீக ஆதரவை அளித்து உள்ளது. அதேபோல் தமிழகத்தில் 8-ந் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கும் எங்களது தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சம்மேளன துணை தலைவர்கள் ராஜூ, சாத்தையா, துணை செயலாளர்கள் நிஷாத் ரகுமான், சுப்பு மற்றும் பல்வேறு மாவட்டங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.