வேலூரில், திருமணம் ஆன மறுநாளே புதுமாப்பிள்ளை ‘திடீர்’ சாவு - போலீசார் விசாரணை
வேலூரில் திருமணம் ஆன மறுநாளே புதுமாப்பிள்ளை திடீரென இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி சாவடி தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவருக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவ சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் தமிழ்ச்செல்வனை எழுப்ப முயன்றனர். ஆனால் சுயநினைவை இழந்ததால் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரின் தாயார் தவமணி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
தமிழ்ச்செல்வன் எப்படி இறந்தார் என்பது குறித்து முழுமையான விவரம் தெரியவில்லை. ‘சுவிட்ச்’ போர்டில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கியதால் இறந்தாரா?, நெஞ்சுவலி காரணமாக இறந்தாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தை சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் இறப்பு குறித்த தகவல் தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருமணம் ஆன மறுநாளே வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.