குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் மழை சேத பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் மழை சேத பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.;

Update: 2020-12-06 05:54 GMT
கடலூர்,

வங்க கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலையொட்டி பெய்த மழையை விட தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

பல்வேறு குடியிருப்புகள், கிராமங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிஞ்சிப்பாடிக்கு மதியம் 3.30 மணி அளவில் வந்தார்.

பார்வையிட்டார்

தொடர்ந்து அவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆடூர்அகரம், பரதம்பட்டு ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதையும் பார்வையிட்டார். முன்னதாக தனித்தீவாக மாறிய பரதம்பட்டு மக்களுக்கு உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பிறகு மேல்பூவாணிக்குப்பம் ஏரி ஷட்டர் பகுதியில் கூடி நின்ற மக்களிடம், அங்குள்ள ஏரியின் நீர் இருப்பு, பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். தெற்கு பூவாணிக்குப்பம் கிராமத்திற்கு சென்ற அவர் அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்கினார். அதையடுத்து தானூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை மு.க.ஸ்டாலின் நடந்து சென்றபடி பார்வையிட்டார். அங்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதையும் பார்வையிட்டார்.

நிவாரண பொருட்கள்

அதைத்தொடர்ந்து சிதம்பரம் சென்ற மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4-வது வார்டு மக்கள் 350 பேர் தங்கி இருந்த மண்டபத்திற்கு சென்று, அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து சி.தண்டேஸ்வரநல்லூர் புறவழிச்சாலையில் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. முதன்மை செயலாளர் நேரு எம்.எல்.ஏ., கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ரமேஷ் எம்.பி., துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., நகர செயலாளர்கள் செந்தில்குமார், ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மருதூர் ராமலிங்கம், இள.புகழேந்தி, அய்யப்பன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், மாமல்லன், மாவட்ட மாணவரணி செயலாளர் நடராஜன், மீனவரணி தமிழரசன், நகர இளைஞரணி அமைப்பாளர் அருள், தகவல் தொழில்நுட்ப அணி நகர அமைப்பாளர் ஸ்ரீதர், மாணவரணி அமைப்பாளர் சுதாகர், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேஷ், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்