கனமழையால் கடும் பாதிப்பு: வெள்ள சேதங்களை படகில் சென்று அமைச்சர், கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள சேதங்களை படகில் சென்று அமைச்சர், கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.

Update: 2020-12-06 05:47 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக பெய்து வரும் கன மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் 1லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மழைவெள்ள பாதிப்பு குறித்து களஆய்வு செய்வதற்காக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் டி.பி.ராஜேஷ், சென்னை உப்பு உற்பத்தி கழக மேலாண் இயக்குனர் அமுதவள்ளி, தொழில் மற்றும் வர்த்தகம் கூடுதல் இயக்குனர் விசுமகாஜன் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலூர் வந்தனர்.

ஆய்வு

இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினர், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், வேளாண்மை துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி மற்றும் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோருடன் நேற்று காலை கல்குணம் பரவனாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைவெள்ளத்தை பார்வையிட்டனர். பின்னர் கனமழையால் சேதமடைந்த கல்குணம்-திருவெண்ணெய்நல்லூர் தரைப்பாலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதே பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

படகில் சென்று...

அதனை தொடர்ந்து குமராட்சி ஒன்றியம் திருநாரையூர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை கண்காணிப்பு குழுவினர் மற்றும் அமைச்சர் எம்.சி.சம்பத், பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் ரப்பர் படகில் சென்று அப்பகுதியில் மழைவெள்ள சேதங்களை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை பார்வையிட்டனர். தொடர்ந்து குமராட்சி ஊராட்சி ஒன்றியம் எள்ளேரி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட அதிகாரிகள், அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

ஆய்வுக்கூட்டம்

இதையடுத்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழைவெள்ள மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் முகாம்களில் தங்கும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு முகாம்களில் ஆரம்ப சுகாதார மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். போதிய மருந்து பொருட்களும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

1½ லட்சம் ஏக்கர்

பின்னர் ககன்தீப்சிங்பேடி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 3 நாட்களில் மழைநீர் முழுமையாக வடியும். மழை நின்றபிறகு வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் பயிர்களுக்கு காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

கூட்டத்தில் சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்