மழை நீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்; விவசாயிகள் கவலை
புரெவி புயலால் இளையான்குடியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மிளகாய் செடிகள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
வானம் பார்த்த பூமி
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. குறிப்பாக இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் வறட்சி பகுதியாக காணப்படுகிறது. வறட்சி காலங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் தான் இப்பகுதி மக்களுக்கு கை கொடுத்து வருகிறது.
இருப்பினும் கூட இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கிணற்று பாசனத்தை நம்பி ஆண்டுதோறும் மிளகாய் செடிகளை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இளையான்குடி, கண்ணமங்கலம், சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், சாத்தணி, உச்சந்தட்டு, குமாரக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிர் சாகுபடி செய்திருந்தனர்.
தண்ணீரில் மூழ்கிய மிளகாய்செடிகள்
இந்த நிலையில் தற்போது இந்த செடிகள் பயிரிட்டு காய்கள் காய்க்கும் பருவத்தில் உள்ளன. இந்த நேரத்தில் வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழை இளையான்குடி பகுதியில் அதிகபட்சமாக 34.5 மில்லி மீட்டர் வரை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக இங்கு பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் முற்றிலும் மழைநீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தொடர்ந்து மழைநீர் தேங்கி நின்றால் வேர் அழுகி செடிகள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் இரவு, பகலாக வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
விவசாயிகள் கவலை
சில விவசாயிகள் மழைநீர் தேங்கிய மிளகாய் செடி வயல்களில் வாடகைக்கு டீசல் மூலம் இயங்கும் மோட்டாரை கொண்டு தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதமும் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் செலவு ஏற்படுவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். டீசல் மோட்டாரை வாடகைக்கு எடுக்க முடியாத விவசாயிகள் வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் பக்கத்து வயலுக்கு தண்ணீரை வடிக்கட்டி பயிரை காப்பாற்றி வருகிறார்கள். தொடர்ந்து மழைநீர் நின்றால் மிளகாய் செடி அழுகி விடக்கூடாது என கவலைப்பட்டு உள்ளனர்.