தேவகோட்டை அருகே 2 கார்கள் மோதல்; ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பலி
தேவகோட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.
கார்கள் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 43). பேக்கரி நடத்தி வந்தார். இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தனது அக்காள் செல்வியுடன்(53) ஆர்.எஸ்.மங்கலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் லட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள செலுகை கார்த்திகேயன் தேவகோட்டைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார் இரவு 7 மணிக்கு தேவகோட்டையை அடுத்த புளியால் அருகே பைபாஸ் சாலையில் வந்த போது எதிரே நாய் குறுக்கிட்டது. இதனால் நிலைதடுமாறிய அந்த காரும், எதிரே கண்ணன் வந்த காரும் நேருக்கு நேர் மோதி நொறுங்கின.
சாவு
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வி, கார்த்திகேயன் ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் இறந்த கண்ணன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.