டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சட்ட நகல், மோடியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-06 04:08 GMT
விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ஆதரித்தும் தமிழகத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பு ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

42 பேர் கைது

இதில் விவசாய சங்கத்தினர் லட்சுமி, ஆனந்தராஜ், பாலசுப்பிரமணி, பாவாடை, ஆறுமுகம், ஏழுமலை, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி வேளாண் திருத்த சட்ட மசோதா நகல் மற்றும் பிரதமர் மோடியின் உருவப்படத்தை தீ வைத்து எரிக்க முயன்றனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 42 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்