டி.என்.பி.எஸ்.சி. நிரப்பும் பணியிடங்களில் தமிழ்வழியில் படித்தவர்கள் இடஒதுக்கீடு மசோதா 8 மாதமாக கவர்னர் ஒப்புதலுக்கு உள்ளது; மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்

“டி.என்.பி.எஸ்.சி. நிரப்பும் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 8 மாதமாக கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது” என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Update: 2020-12-06 02:24 GMT
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

குரூப்-1 தேர்வு
மதுரை சட்டக்கல்லூரியில் 3 ஆண்டு சட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்து முடித்து உள்ளேன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியானது. இதற்கான முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். இதன் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழி கல்வி படித்ததற்கான ஒதுக்கீட்டின் கீழும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. விதிகளின்படி தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதி உள்ளது.

ஆனால் தமிழ்வழிக்கல்வி இடஒதுக்கீடு சலுகையின்கீழ் தொலைநிலை கல்வியில் படித்தவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து இருந்தது தெரியவந்தது. தொலைநிலைக்கல்வியில் படிப்பவர்கள் முழுமையாக தமிழ் வழியில் படிப்பதில்லை. இவர்களை தமிழ் வழியில் படித்தவர்களாக கருத முடியாது. எனவே தமிழ்வழிக்கல்வி இடஒதுக்கீடு சலுகையின்கீழ் மேற்கண்ட பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடைவிதிக்க வேண்டும். நேரடியாக கல்லூரியில் தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நிலுவையில் உள்ளது
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. உரிய பதில் அளிக்கவில்லை என்றால் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல், “டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் 85 பேர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த 8 மாதங்களாக நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “அந்த 85 பேரின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். பின்னர், “ஆங்கிலம் படித்தவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தான் வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்றனர். முடிவில், வழக்கு விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்