திருச்சியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரால் பரபரப்பு

திருச்சியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரால் பரபரப்பு.

Update: 2020-12-06 01:06 GMT
மலைக்கோட்டை,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ்நிலையத்தை நோக்கி சென்ற அரசு பஸ்சை திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள வாசன் சிட்டியை சேர்ந்த டிரைவர் சரவணன்(வயது 49) ஓட்டி வந்தார். பஸ் கலைஞர் அறிவாலயம் அருகே வந்த போது, அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள சீனிவாசா நகர் பேங்கர்ஸ் காலனியை சேர்ந்த உமர்பரூக்(26) என்பவருக்கும், பஸ் கண்டக்டர் தேவராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே மோட்டார் சைக் கிளை ரோட்டின் குறுக்கே நிறுத்தி உமர்பரூக் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பஸ்சை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி வந்து வாக்குவாதம் செய்யவே, திடீரென உமர்பரூக் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி டிரைவர் தலையில் ஓங்கி அடித்தார். பதிலுக்கு டிரைவரும் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதை பார்த்த அங்கு கூடிய பொதுமக்களும், அங்கு வந்த போலீசாரும் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர் தலையில் காயமடைந்த டிரைவர் சரவணன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உமர்பரூக்கை கோட்டை போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் உமர்பரூக் கடந்த 5 ஆண்டுகளாக சத்திரம் பஸ் நிலையம் அருகில் வி.என்.நகரில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில், மன நல பாதிப்பு சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. மேலும் இதற்காக தொடர்ந்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்