புதுச்சேரியில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியது பல்லாங்குழியான சாலைகளால் பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியது. சேதமடைந்து பல்லாங்குழியாக மாறிய சாலைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2020-12-06 00:51 GMT
புதுச்சேரி,

வங்ககடலில் உருவான புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

குறிப்பாக பாவாணர் நகர், ரெயின்போநகர், கிருஷ்ணாநகர், வெங்கட்டா நகர், பூமியான்பேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக் கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து மழை நீடித்ததால் வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் மழைவெள்ளம் அதிக அளவில் தேங்கியதால் 100 அடி ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பல்வேறு இடங்களில் ரோடுகளை வெட்டி மழைநீர் வடிய வைக்கப்பட்டது. தூய்மாவீதி, வெங்கட்டா நகர் ஜீவாநகர் ஆகிய இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை இரவு பகலாக ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் பொதுப்பணி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆங்காங்கே சிறிய அளவில் தேங்கி கிடந்த மழைநீரும் வெளியேற்றப்பட்டது. உடனுக்குடன் தண்ணீர் வெளியேறியதாலும், மழை குறைந்ததாலும் அடுத்தடுத்து தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவும் விடிய விடிய மழை பெய்தது. ஆனால் அதன் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. மதியம் வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. அதன்பிறகு மழை இல்லை. ஆனால் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணிவரை 3.10 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. காரைக்காலில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.

கடந்த 26-ந்தேதி மரக்காணம் அருகே நிவர் புயல் கரையை கடந்த போது மழையால் புதுவை பலத்த சேதத்துக்குள்ளானது. இதில் இருந்து மீண்டு வருவதற்குள் புரெவி புயல் மழையிலும் சிக்கியதால் தாக்குப்பிடிக்க முடியாமல் புதுவை சாலைகள் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

புதிய பஸ் நிலையம், புஸ்சி வீதி, கடற்கரை சாலை, சுப்பையா சாலை, முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, பூமியான் பேட்டை வெங்கட்டாநகர் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழிகளாக கிடக்கின்றன.

முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தொட்டி பள்ளங்கள் உருவாயின. அதுமட்டுமின்றி மீண்டும் ஜல்லி கற்களும் பெயர்ந்து சாலைகள் முழுவதும் பரவி கிடக்கின்றன. இந்த ஜல்லி கற்கள் இருசக்கர வாகனங்களின் டயர்களை எளிதாக பஞ்சராக்கி வருகின்றன.

பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குழாய்கள், கேபிள்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருந்து வருகின்றன. தற்போது மழையால் மேலும் சேதமடைந்து அவற்றில் வாகனங்கள் சிக்கி கொள்கின்றன.

சிறு நகர பகுதியிலும், கிராமப் புறங்களிலும் இதேபோல் சாலைகள் சேதமடைந்து கிடக்கின்றன. மாநிலம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்