தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்

தூத்துக்குடி அருகே விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

Update: 2020-12-06 00:32 GMT
முத்தையாபுரம் பாரதிநகரில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்; கூடுதல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு
பரவலாக மழை
தூத்துக்குடி தென் மண்டல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இந்த மழைநீர் வடிந்துசெல்ல வடிகால் வசதி இல்லாதால் தெருக்களில் முழங்கால் அளவு மழை வெள்ளம் தேங்கி நின்றது. மேலும் சில பகுதிகளில், மழைநீர் வீடுகளுக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சில வீடுகளில் வீட்டினுள் சென்று மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதேபோல் பாரதி நகர் பகுதியில் வீட்டிற்குள் சூழ்ந்த மழை நீரை மக்கள் தூங்காமல் தண்ணீரை வெளியேற்றி தவித்துக் கொண்டிருந்தனர். மேலும் குமாரசாமி நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டிற்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீருடன் மழைநீர் கலந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூடுதல் கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் பாரதிநகர், குமாரசாமி நகர், சூசைநகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சியின் ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை தென் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டனர்.

இதனை கூடுதல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநகராட்சி பகுதியில், மழை நீரை வெளியேற்றும் பணிகளை, கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி தென்மண்டல உதவி ஆணையர் சேகர், முள்ளக்காடு பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்