மருந்து கம்பெனியில் தீ விபத்து தீயை அணைக்க முயன்ற வீரர் மூச்சுத்திணறி சாவு

மருந்து கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர் மூச்சு திணறி பலியானார்.

Update: 2020-12-06 00:14 GMT
அம்பர்நாத், 

நவிமும்பை தலோஜா பகுதியில் மருந்து தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் சம்பத்தன்று நள்ளிரவு 12.15 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மெத்தனால் காரணமாக தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த நவிமும்பை சிட்கோ மற்றும் எம்.ஐ.டி.சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணியில் அம்பர்நாத்தை சேர்ந்த பாலு ராமு தேஷ்முக் (வயது32) என்ற வீரர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது ரசாயனத்தில் பற்றிய தீப்பிழம்பு அதிகமான நச்சுப்புகையை வெளியே தள்ளியபடி எரிந்ததால் இதனை சுவாசித்த பாலு ராமு தேஷ்முக் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்தார். இதனை கண்ட மற்ற தீயணைப்பு படையினர் அவரை மீட்டு காமோட்டோவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த தீயணைப்பு படை வீரரின் உடலை தலேஜா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்