விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: நெல்லையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெல்லையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-05 23:28 GMT
நெல்லையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்
நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். மக்கள் நலனுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும்‘ என்றார். 

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்