தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாடு டோல்கேட் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கட்சியின் வழிகாட்டு குழு உறுப்பினர் மோகன், பிரபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஞானவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், சட்டத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-
வர இருக்கிற தேர்தல் அ.தி.மு.க. வரலாற்றில் முக்கியமான தேர்தலாகும். மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும். அ.தி.மு.க.வினரின் வாக்குகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று ஜெயலலிதாவின் கொள்கை, லட்சியத்தை ஏற்று லட்சக்கணக்கான இளைஞர், இளம்பெண்கள் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக கட்சி நிர்வாகிகள் இருக்க வேண்டும். இளைஞர்கள், மகளிர் ஒத்துழைப்பு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. நாளை இந்த இயக்கத்தை வழி நடத்துபவர்கள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்தான். எனவே கிளை நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் சென்று அ.தி.மு.க.வின் வாக்கை உறுதிப்படுத்த வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி.பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என மக்கள் மத்தியிலும், அரசு அலுவலர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைவது உறுதி. எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அரசு, அய்யப்பா, கதிர்.தண்டபாணி, அருணகிரி, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு கைத்தறி இணைய தலைவர் எஸ்.எம்.பி.பரமசிவம், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாகண்ணு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.