திருப்பத்தூர், கலெக்டர் அலுவலகத்தில் அக்காள், தம்பி தீக்குளிக்க முயற்சி - புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அக்காள், தம்பி தீக்குளிக்க முயன்றனர். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நரியனேரி மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லாவண்யா (வயது 32). மகன் சீனிவாசன் (29). முனுசாமி ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் சீனிவாசன், லாவண்யா இருவரும் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.
இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில் எனது தந்தை 3 திருமணம் செய்துள்ளார். நாங்கள் முதல் மனைவியின் மகன், மகள். எங்கள் தாத்தாவுக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் குடிசை வீடு கட்டி வசித்து வருகிறோம். அதனை காலி செய்யும்படி எனது தந்தை மற்றும் சித்தி குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து கந்திலி போலீசில் 3 முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டருக்கு தெரிவித்து விட்டு தீக்குளிக்க முடிவு செய்தோம் என்றார்.
உடனடியாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள், தீக்குளிக்க முயன்ற இருவருக்கும் வேட்டி, சேலை வழங்கி அறிவுரை கூறினார்கள். பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.