திருவெறும்பூர் அருகே பெரியகுளம் நிரம்பியதால் தேவராயநேரியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

திருவெறும்பூர் அருகே உள்ள பெரியகுளம் நிரம்பியதால் தேவராயநேரியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2020-12-05 13:45 GMT
திருவெறும்பூர்,

‘புரெவி’ புயல் காரணமாக திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் தேவராயநேரியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளம் உள்ளது. உய்யகொண்டான் வாய்க்கால் பாசன உபரிநீர், கட்டளை வாய்க்கால் உபரி நீர் மற்றும் அருகே உள்ள கிராமங்களான பொய்கைகுடி, அசூர் ஆகிய கிராமங்களிலிருந்து வரும் உபரி நீர் அனைத்தும் இந்த பெரியகுளத்தில் தான் கலக்கிறது. இதனால், இந்த குளம் வேகமாக நிறைந்தது.

இந்த குளத்திற்கு முறையான வடிகால் வசதி இல்லாததால் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் இப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த தகவல் அறிந்த திறுவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். பெரியகுளத்தில் நிரம்பி வழியும் நீரை வெளியேற்ற வடிகால் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து தேவராயநேரி நரிக்குறவ மக்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்