தொடரும் மழையால் வீடுகள், அலுவலகங்களை வெள்ளம் சூழ்ந்தது - பயிர்கள் சாய்ந்தன: குண்டும்-குழியுமாக மாறிய சாலைகள்
திருச்சியில் 3-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பயிர்கள் சாய்ந்தன. சாலைகள் குண்டும், குழியுமாக மாறின.
திருச்சி,
வங்கக்கடலில் ‘புரெவி’ புயல் உருவானதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருச்சியில் கடந்த புதன்கிழமை பெய்ய தொடங்கிய மழை வியாழக்கிழமை இரவு வரை நீடித்தது. விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் திருச்சி நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று முன்தினம் இரவு திருச்சியில் மழை இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நேற்று காலையிலிருந்தே மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் திருச்சி என்.எஸ்.பி. சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சாலையோர வியாபாரிகள் மட்டும் மழையில் நனைந்தபடியே வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
3-வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் திருச்சி நகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்ததால் அவற்றில் தண்ணீர் தேங்கி நின்றன. திருச்சி கோர்ட்டுக்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், மின்வாரிய அலுவலகம், துணை கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்கள் மழை நீரால் சூழப்பட்டு இருந்தது. இதனால் அந்த அலுவலங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே சென்றனர்.
தொடர்ந்து பெய்து வந்த மழையால் திருச்சி நகரில் பல சாலைகள் குண்டும்- குழியுமாக மாறின. குறிப்பாக திருச்சி முத்தரையர் சிலை அருகில் மற்றும் மத்திய பஸ் நிலையம் பகுதி, ஜங்ஷன், பாலக்கரை, தஞ்சாவூர் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கிய இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் குண்டும்- குழியுமாக மாறின. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் இந்த சாலைகளில் செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். மாநகராட்சி, மாவட்ட சாலைகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதிலும் பிரச்சினை ஏற்பட்டது.
சமயபுரம் அருகே உள்ள மேலசீதேவிமங்களம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரோஜா (வயது 60). கூலி வேலை செய்து வரும் இவர் மண் சுவரால் கட்டப்பட்ட கூரை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையால் இவரது வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (59) என்பவரது வீடும் மழையால் இடிந்து சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வருவாய் ஆய்வாளர் முருகேசன், மேலசீதேவிமங்களம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சேத விவரங்களை பற்றி மண்ணச்சநல்லூர் தாசில்தார் மலருக்கு அறிக்கை அனுப்பினர். அதைத்தொடர்ந்து சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் 2 பேருக்கும் அரசு சார்பில்இலவச வேட்டி-சேலை, அரிசி, மண்எண்ணெய் வழங்கப்பட்டது. மேலும்,அவர்களது வங்கிக்கணக்கில் நிவாரண தொகை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர் மழை காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலையில் உள்ள 147 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாவடிக்குளம் நிரம்பி வருகிறது. இந்த குளத்தை தூர் வாரவும், குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கவும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தொடர் மழை காரணமாக அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்ற பிறகு பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு குளம் நிரம்பி வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வட்டாரத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாததாலும், மக்காச்சோள பயிர்களை படைபுழு தாக்கியதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகினர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் காற்றால் மக்காச்சோள பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பிலியபுரம் பகுதியிலுள்ளபுளியஞ்சோலை மற்றும் கொல்லிமலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் புளியஞ்சோலை அய்யாறு மற்றும் இப்பகுதியிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் நீரோட்டம் அதிகரித்துள்ளது.
தா.பேட்டை அருகே மங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அரவன் என்பவரது ஓட்டு வீட்டின் ஒருபக்க மண்சுவர் மழையினால் இடிந்து விழுந்தது. வருவாய் ஆய்வாளர் கலைவாணன், கிராம நிர்வாக அதிகாரி குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு முசிறி தாசில்தார் சந்திரதேவநாதனிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதனைத்தொடர்ந்து அரவன் குடும்பத்தினருக்கு அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் மற்றும் நிவாரண உதவிகளை வருவாய் துறையினர் வழங்கினர். மேலும் முசிறி அருகே ஏவூர் ஊராட்சி கொல்லப்பட்டியில் கமுகாயி என்பவரது பயன்படுத்தாத ஓட்டு வீட்டின் ஒருபக்க மண்சுவரும் இடிந்து விழுந்தது.