வடிகால்களை முறையாக தூர்வாரக்கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல்

வடிகால்களை முறையாக தூர்வாரக்கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-05 12:30 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் திருமானூர், கண்டராதித்தம், இலந்தைக்கூடம், முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல்வயல்கள் தண்ணீரில் மூழ்கின. இதற்கு வரத்து வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே காரணம் என்று குற்றம்சாட்டி முடிகொண்டான் கிராமத்தில் தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விவசாய சங்க தலைவர் தங்கராசு தலைமையில் விவசாயிகள் கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, தொடர்மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், அரசு உடனடியாக வடிகால்களை முறையாகவும், முழுமையாகவும் தூர்வார வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், 300 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கி விட்டன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே போல வெள்ளநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கின. மீண்டும் நெற்பயிர்கள் நடவு செய்தோம். தொடர் கனமழையால் மீண்டும் பயிர்கள் மூழ்கிவிட்டது. இனி நடவுக்கு பயிர்கள் கிடைக்காது. இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்ததற்கு, அதிகாரிகள் முறையாக வெள்ளநீர் வடியும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததே காரணம். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முடிகொண்டான் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால், அதனை உயர்மட்ட பாலமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கரைவெட்டி ஏரியில் இருந்து வரும் ஓடை, குந்தபுரம் கிராமத்தில் இருந்து வரும் ஓடை, திருப்பெயர் கிராமத்தில் இருந்து வரும் முறுக்கு ஓடை உள்ளிட்ட மூன்று ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி திருவெங்கனூர் வரை உள்ள ஓடைகளின் வழித்தடத்தை முழுமையாக ஆழப்படுத்த வேண்டும். நீரானது கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் இடம் வரை ஆக்கிரமிப்புகள் இல்லாத வகையில் கரைகளை இருபுறமும் கான்கிரீட்டாலான கால்வாய்களாக அமைத்து தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

மேலும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் வாரிகள் தோண்டப்பட்டு, வயலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்