தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் - திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு
அவினாசி அருகே சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஆகிய மூன்று ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 890 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்கு அந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அவர்கள் தெரிவித்தனர். கலெக்டர் உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டதால் அவர் வரும்வரை ரோட்டோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மதியம் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஊராட்சிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை நசுக்கி அளிக்கும் வகையில் எங்கள் பகுதியில் சிப்காட் நிறுவனம் தொழில் பூங்கா அமைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 3000 குடும்பத்தினருக்கு மட்டுமே விவசாய பூமி உள்ளது. சிப்காட் நிறுவனம் தொழில் பூங்கா அமைக்குமானால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய அவலம் ஏற்படும்.
சிப்காட் தொழிற்சாலைகள் இங்கு ஏற்படுத்தப்பட்டால் விவசாயம் அழிவதோடு நீர், நிலம் மற்றும் காற்று மாசடைந்து மக்கள் வாழ தகுதியற்ற சூழ்நிலை ஏற்படும். எங்களின் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி சிப்காட் நிறுவனத்திற்கு கொடுப்பதை நாங்கள் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கிறோம். சிப்காட் தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் செயல்படுத்த வேண்டாம் என்று தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கக்கூடாது. எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறுகின்றனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்
இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.