ராமேசுவரத்தில் 3-வது நாளாக சூறாவளி காற்றுடன் கனமழை 60-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

ராமேசுவரம் பகுதியில் 3-வது நாளாக நேற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் 60-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன.

Update: 2020-12-05 10:00 GMT
ராமேசுவரம்,

வங்கக் கடலில் உருவாகி இருந்த புரெவி புயல் வலு இழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 3-வது நாளாக ராமேசுவரம் பகுதியில் கன மழை கொட்டியது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று காலை 6 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழையால் ராமேசுவரம் கரையூர் பகுதியில் உள்ள சக்திவேல் முருகன் கோவிலை மழைநீர் சூழ்ந்தது. தெற்கு கரையூர், இந்திரா நகர், அண்ணா நகர், காந்தி நகர் உள்ளிட்ட ஒருசில தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமையில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பும், ரெயில்வே சுரங்கப்பாதையிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது.

பாம்பனில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் குந்துகால் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர கயிறுகள் அறிந்து ஒன்றோடு ஒன்று மோதி சேதமாகி கரை ஒதுங்கி கிடந்தன.

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் சேதமடைந்து கரை ஒதுங்கி கிடந்த படகுகளை மீட்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டனர்.

புயல் சின்னம் வலுவிழந்ததை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 7-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு, 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தெற்கு கடற்கரையில் மீனவர் ஒருவரின் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை மீனவர்கள் கயிறு கட்டி இழுத்தனர். கடலில் இழுத்துச்செல்லப்பட்ட படகு ஒன்றையும் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து பாதுகாப்பாக கரையில் ஏற்றி வைத்தனர்.

ராமேசுவரம் தாலுகா வடக்கு தெரு, நேதாஜி நகர், கரையூர், தெற்கு கரையூர், முத்துராமலிங்க தேவர் நகர், பாம்பன் தோப்புகாடு ஆகிய பகுதிகளில் சேதமான 9 வீடுகளை தாசில்தார்கள் தியாகராஜன், அப்துல்ஜபார், வருவாய் ஆய்வாளர் பாலன் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண தொகை வழங்கினர். பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் நிறுத்தி இருந்த படகுகள் பலத்த சூறாவளிகாற்றால் நங்கூரம் அறுந்து சேதமாகி கடற்கரையில் ஒதுங்கின. இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,மீன்துறை துணை இயக்குனர் பரிதிஇளம்வழுதி உள்பட அதிகாரிகள் ஒரு படகில் சென்று சேதமான படகுகளை பார்வையிட்டனர். மேலும் சேதமான படகுகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 204 மீ.மீ. மழை பதிவாகி உள்ளது. தங்கச்சிமடம் 88.20 மி.மீ., பாம்பனில் 77.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழையால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலின் ரதவீதிகள், பாம்பன் ரோடு பாலம் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்