“ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும்”: ஆ.ராசா மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு - சிவகங்கையில் பரபரப்பு பேட்டி

ஆ.ராசா குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார் தெரிவித்து சிவகங்கையில் பேட்டி அளித்தார். மேலும் ரஜினிகாந்த் தனது கட்சியை முதலில் பதிவு செய்யட்டும் எனவும் தெரிவித்தார்.

Update: 2020-12-05 09:45 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் நேற்று நடந்த கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணி குறித்தும், அரசு அறிவித்த திட்டங்கள் செயல்பாடு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். ஜெயலலிதாவின் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. தொற்று பரவிய காலகட்டத்தில் அரசு தெரிவித்த நடைமுறைகளை கடைபிடித்ததால்தான் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதுதொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்த காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. ஜனவரி மாதம் அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளோம். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் நிரப்பப்படும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த அரசு நீர்மேலாண்மை திட்டத்தில் தேசிய அளவில் முதன்மை பெற்றுள்ளது.

தேசத்திற்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக வ.உ.சி., ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பரமசிவன் சுப்புரயான் ஆகியோரின் முழு உருவப்படங்கள் தமிழக சட்டமன்றத்தில் வைக்கப்படும்.

தமிழ்நாட்டின் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தினர், கடையர், காலாடி, பள்ளர், குடும்பன், பண்ணாடி வகுப்பினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் பொது பெயரிடக்கோரி அரசுக்கு கோரிக்கை வரப்பெற்றது. இந்தகோரிக்கையை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்கும் வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை தலைவராகக் கொண்டு குழு ஒன்றை அமைத்து, அரசு ஆணையிட்டது.

இக்குழு பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது. இக்குழு பல்வேறு தரப்பினர்களுடைய கோரிக்கைகளையும், சென்னை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையையும் கருத்தில் கொண்டு, பட்டியல் இனத்தில் உள்ள வாதரியன் என்ற உட்பிரிவையும் உள்ளடக்கி, 7 வகுப்பினரையும் தேவேந்திரகுலவேளாளர் என பொது பெயரிட பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குலவேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவேந்திரகுலவேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் அந்த வகுப்பினரின் சமூக நிலையை கருத்தில் கொண்டு, பட்டியல் இனத்தில் தொடரும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரிட்டாலும் இப்பிரிவினர் ஏற்கனவே பெற்று வந்த சலுகைகளும் தொடரும் என்பதற்கான ஆணைகளை ஜெயலலிதாவின் அரசு விரைவில் பிறப்பிக்கும். மாநில அரசின் பரிந்துரையின் மீது மத்திய அரசிடமிருந்து ஆணை பெற இந்த அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.

புதுக்கோட்டை, காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்த குறிப்பிட்ட மக்கள் தொகை வேண்டும். அந்த மக்கள் தொகையை எட்டுகிற போது அரசு அதை அரசு பரிசீலிக்கும்.

ஆ.ராசா குறித்து ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்போது நடந்தது? 2010-ல் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடைபெற்று வந்தது. அதில் மத்திய மந்திரியாக இடம் பெற்றவர் ஆ.ராசா. அப்போது தான் அதில் ஊழல் ஏற்பட்டுள்ளது என்று சொல்லி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த காலக்கட்டத்திலேயே அவர் சிறைவாசம் அனுபவித்தார். நீதிமன்றம் என்ன செய்திருக்கிறது, சி.பி.ஐ. தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை என்று அவரை விடுவித்துள்ளது. இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முறையீட்டில்தான் முடிவு தெரியும்.

ஸ்டாலின் அடிக்கடி டெண்டர் ஊழல் என்று பேசி வருகிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடந்தது? 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு யார் முதலில் பணம் கட்டுகிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதே போன்ற செய்தி எங்காவது உள்ளதா? டெண்டரை நீங்கள் விடும் போது விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதுதான் வழக்கம். அதில் யார் அதிக ஏலத்தில் எடுக்கிறார்களோ, அவர்களுக்குதான் அந்த டெண்டரை கொடுப்பது நடைமுறை. ஆனால் இவர்கள் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக ஒரு தேதியை அறிவித்து முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் தெரிவித்து, முதலில் பணத்தை கட்டச்சொல்லி 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சை வழங்கினார்கள்.

ரூ.13 ஆயிரம் கோடிக்கு அந்த லைசென்சு பெற முடியும். ஆனால் அவர்கள் வெறும் ரூ.1,650 கோடிக்கு அதை கொடுத்துள்ளனர். அதன்பிறகு பிரதமர் 85 நிறுவனங்களுக்கு அதனை வழங்க பரிந்துரை செய்துள்ளார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பது எந்த டெண்டர் விதியில் உள்ளது?

நாங்கள் மாநில அரசின் ஆன்லைன் மூலம் டெண்டர் விடுகிறோம். அதில் ஆன்லைன் மூலம் பணம் கட்டுகிறார்கள். யார் எவ்வளவு பணம் கட்டியுள்ளார்கள் என்று தெரியாது. இதில் ஊழல் என்கிறார்கள்.

2 ஜி வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கு முடிந்தால் அவர் எங்கு இருப்பார் என அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இவர் அங்கம் வகித்த அரசாங்கமே அவரை குற்றவாளி என்று சிறையில் அடைத்தது என்பதைத்தான் நான் தெரிவித்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

சி.பி.ஐ. தகுந்த ஆதாரங்களை சமர்க்கப்பிக்காததால்தான் அவர் விடுவிக்கப்பட்டார்; நீதிமன்றம் விசாரித்து நிரபராதி என்று அவரை விடுதலை செய்யவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதிகமாக அதற்குள் செல்ல வேண்டாம் என்று மேலோட்டமாகத்தான் இதை நான் தெரிவித்தேன்.

அ.தி.மு.க. அரசு சிவகங்கைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. புதிதாக தொழில் தொடங்க வந்தால் நிலத்திற்கு 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தென்மாவட்டங்களில் புதிதாக யாராவது தொழில் தொடங்க வந்தால் அவர்களுக்கும் மானியம் வழங்கப்படும். இதன் மூலம் இங்கு தொழில் அதிகமாக வரவேண்டும்.

அமித்ஷா சென்னைக்கு வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். அப்போது நான் பேசும் போது, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று அவரை வைத்து கொண்டுதான் தெரிவித்தேன்.

ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அவர் அறிவிப்புதான் வெளியிட்டுள்ளர். கட்சியை பதிவு செய்யாமல் அது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது. துணை முதல்-அமைச்சர் அவருடைய கருத்தைதான் தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். என்னை பொறுத்தவரை அவர் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அதன் பிறகு கட்சி என்று வரும். அப்போது அது குறித்து பதில் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்