தேவகோட்டையில் பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டை உடைத்து 51 பவுன் நகைகள் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

தேவகோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 51 பவுன் நகைகள் திருடப்பட்டன. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update: 2020-12-05 09:00 GMT
தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தி.ஊரணி பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி (வயது.43). இவர் பெங்களூருவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தற்சமயம் விடுமுறை காரணமாக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் அரியக்குடியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.

அதள்பிறகு மதியம் 2 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 51 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருடு போய் இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் இவர்கள் கோவிலுக்கு செல்வதை கண்காணித்து திருட்டை அரங்கேற்றி இருக்கிறார்கள். இது குறித்து தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பாலாஜி குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது பற்றி வேறு யாரிடமாவது கூறினாரா? எனவும் அவரிடம் விசாரித்தனர். இது குறித்து தேவகோட்டை நகர் பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்