சோழவந்தான் பகுதியில் மழைக்கு சுவர் இடிந்து வீடுகள் சேதம்; அதிர்ஷ்டவசமாக கணவன்-மனைவி உயிர் தப்பினர்
சோழவந்தான் அருகே கடந்த 2 நாட்களாக பெய்த மழைக்கு சுவர் இடிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
சுவர் இடிந்து விழுந்தது
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பேச்சிகருப்பன்(வயது 75). இவரது மனைவி முனியம்மாள்(70). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் இவர்களுடைய பக்கச் சுவர்கள் ஊறியதால் பிளவு ஏற்பட்டு பெயர்ந்து விழு தொடங்கியது. இந்தநிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜபாண்டி என்பவர் பேச்சிகருப்பன் வீட்டில் இருந்த சுவர் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுவதை பார்த்தார். உடனே வீட்டில் இருந்த வயதான கணவன்-மனைவி இருவரையும் சுவர் இடிந்து விழுந்தால் பெரிய ஆபத்தாகி விடும் என கூறி வெளியே அழைத்து வந்து விட்டார். இதைதொடர்ந்து சற்று நேரத்தில் மழைநீரால் ஊறியிருந்த பக்கச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சரியான நேரத்தில் கணவன்-மனைவியை அங்கிருந்து வெளியேற்றாவிட்டால் இருவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி விபரீதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பரிந்துரை
இதேபோல் குருவித்துறை ஏலம்மாள்(67), நெடுங்குளம் கிராமத்தில் முத்து இருளாயி(62), பஞ்சவர்ணம்(59), எம்.புதுப்பட்டி கிராமத்தில் பீமன்(45) ஆகியோர் வீடுகளும் மழைக்கு இடிந்து விழுந்தது.சேதமடைந்த வீடுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துக்குமரன், மணிவேல் ஆகியோர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.