புரெவி புயலால் பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வெள்ளக்காடானது, புதுவை 7,500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
புரெவி புயலால் பலத்த மழை பெய்ததையொட்டி புதுவை வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 7,500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி,
புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி ஏற்கனவே விடிய விடிய பெய்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் பகல் முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரிய வாய்க்கால், உப்பனாறு போன்ற வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பிச் சென்றன. நகரில் உள்ள சிறுசிறு கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்து வரும் தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லாமல் போனதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. நகரில் உள்ள பூமியான்பேட்டை, நடேசன் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ஜீவாநகர், பிருந்தாவனம், ராஜா நகர், சுதந்திர பொன்விழா நகர் என பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்தபடி இருந்ததால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அங்கு வசித்து வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
இதுதவிர ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது. சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போனது.
நகரப் பகுதியில் இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சதுக்கம், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, வழுதாவூர் சாலை, புஸ்சி வீதி, லப்போர்த் வீதி, காந்தி வீதி என பல்வேறு முக்கிய வீதிகளில் வாகனங்கள் நீந்தியபடி சென்றன. சில இடங்களில் இரு சக்கர வாகனங்களில் என்ஜின், சைலன்சருக்குள் தண்ணீர் புகுந்ததால் அவற்றை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.
பிற்பகலில் ஓரளவு மழை ஓய்ந்த நிலையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. பாவாணர் நகர், பூமியான்பேட்டை, வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வெங்கட்டா நகரில் தேங்கிய தண்ணீரை வள்ளலார் சாலையை எந்திரம் மூலம் துண்டித்து வாய்க்கால் தோண்டி அதன் வழியாக வடிய வைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. சின்னமணிக் கூண்டு குபேர் மீன் அங்காடி, நெல்லித்தோப்பு மார்க்கெட் மழை தண்ணீரில் மூழ்கின.
காமராஜர் சாலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களால் அங்கு பணம் எடுக்க செல்ல முடியவில்லை. 45 அடி ரோட்டில் பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் அங்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரில் எங்கு பார்த்தாலும் மழையால் சேதமடைந்து சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. 100 அடிரோடு, கடலூர் ரோடு, விழுப்புரம் ரோடு என பல்வேறு சாலைகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது.
காலாப்பட்டு, பிள்ளைச் சாவடியில் 2 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் போனதால் உயிர்சேதம் இல்லாமல் போனது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ள போதிலும் ஆங்காங்கே கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கிராமப்புறங்களில் சில ஏரிகள் உடையும் அபாயத்தை எட்டி உள்ளன. விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீனவர்கள் தொடர்ந்து நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் மழை நீரை பொதுப்பணி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். சாலைகளில் உள்ள வாய்க்கால்களில் அடைப்பு இருந்தால் அதை அப்புறப்படுத்தினார்கள். இரவு, பகலாக இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். தற்போது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பது மேலும் அவர்களை கவலையடைய வைத்துள்ளது.
மழையால் பாதிப்பு அதிகரித்ததையொட்டி மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் இருந்தவர்களிடம் தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு சில இடங்களில் கூடுதலாக மோட்டார்களை வைத்து மழைநீரை வெளியேற்ற கேட்டுக்கொண்டார். அவருடன் ஜான்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.