காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர் ஆலோசனை
புதுவை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவ் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி,
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், துணைத்தலைவர்கள் நீல.கங்காதரன், தேவதாஸ், நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, ரகுமான், சாம்ராஜ், ரமேஷ், கல்யாணசுந்தரம், காங்கேயன், மகளிர் காங்கிரஸ் பஞ்சகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பை வரி, மின்சார கட்டண அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், முதியோர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஏழைகளுக்கு குப்பை வரி ஏதும் விதிக்கவில்லை. 100 சதுர அடிக்கு மேல் கொண்ட வீடுகளுக்குத்தான் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இறுதியாக பேசிய மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டும். கவர்னரின் எதிர்ப்பினையும் மீறி மக்களுக்கு தேவையானதை ஆட்சியாளர்கள் செய்கின்றனர். தனிமனித வளர்ச்சி வெற்றியை தராது. அனைவரும் வெற்றியை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தன்னை தனியாக சந்தித்தோ அல்லது செல்போன் மூலமாகவோ கட்சி நிர்வாகிகள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறினார்.
கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை. மழை காரணமாக குறைந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.