நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; உறவினர் வீடுகளில் பொதுமக்கள் தஞ்சம்

தொடர் மழை காரணமாக நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உறவினர்கள் வீடுகளில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2020-12-04 23:22 GMT
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் வீடுகளை சுற்றிலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து வரும் பெண்கள்
நாராயணபுரம் ஏரி நிரம்பியது
சென்னை புறநகர் பகுதியில் பெய்த கன மழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் கோவிலம்பாக்கம் விடுதலை நகர், பள்ளிக்கரணை அண்ணா நகர், ராஜேஷ் நகர் பகுதிகளில் உள்ள சுமார் 2000 வீடுகளை மழைநீர் சூழந்து உள்ளது. பள்ளிக்கரணை ஏரி நிரம்பி தண்ணீர் வெள்ளம் போல் வருவதால் வீடுகளை சுற்றிலும் முட்டு அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அண்ணாநகரில் கீழ் தள வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். மாடி வீடுகளில் இருப்பவர்கள் வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களான தண்ணீர், பால் போன்ற பொருட்களை ஊழியர்கள் முட்டு அளவு தண்ணீரில் சென்று வழங்கி வருகின்றனர்.

நாராயணபுரம் ஏரியின் மதகை திறந்ததால் தண்ணீர் வெளியேறும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததால் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஏரியின் மதகை திறந்து விட்டனர்.

மழைநீர் புகுந்தது
தாம்பரம் இரும்புலியூர் அருகே டி.டி.கே. நகர் சர்வீஸ் சாலை சுரங்க பாலம் பகுதியில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.டி.கே.நகர் பகுதியில் வெள்ள நீரில் ஆம்புலன்ஸ் சிக்கியது. அங்கிருந்தவர்கள் உதவியுடன் அங்கிருந்து ஆம்புலன்சை தள்ளி வெளியேற்றினர். பீர்க்கன்காரணை பேரூராட்சி சக்தி நகர் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அதேபோல் பெருங்களத்தூர் பேரூராட்சியில் பெரும்பாலான காலி இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அரசு ஆஸ்பத்திரிக்குள்
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கீழ்பகுதியில் மழைநீர் தேங்கியது. மழை நீரை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.

செம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திருமலை நகர் பகுதியில் அனைத்து தெருக்கள் மற்றும் செம்பாக்கம் நகராட்சி வள்ளல் யூசுப் பகுதிகளில் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வெளியேற்றினர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளில் வெள்ளநீர் தேங்கியது.

அடையார் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் பிணத்தை திருநீர்மலை அருகே தீயணைப்பு படையினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 50 வயது உடைய அவர் வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மரம் சாய்ந்தது
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பான்சத்திரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சுமார் 150 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேறுடன் சாய்ந்தது. இதில் அருகில் இருந்த மின்சார வயர்கள் மீது மரக்கிளை விழுந்தால் அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

இதனால் பாப்பான்சத்திரம் பகுதியில் இரவு முதல் மின்வெட்டு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாய்ந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குளம்போல் தேங்கிய தண்ணீர்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடி சென்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மழை நீரோடு உபரி நீரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வசந்தம் நகர், விவேகானந்தன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

மேலும் செய்திகள்