சென்னையில் தொடர் மழையால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு; செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது.
புழல் ஏரி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி புழல் ஏரியின் நீர் மட்டம் 19.85 அடியாகவும், கொள்ளளவு 2,982 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. ஏரிக்கு வினாடிக்கு 1,750 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் செங்குன்றம், அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலை உருவானது. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தது.
ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரானது செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மணலி, சடயங்குப்பம் வழியாக எண்ணூர் கடலுக்கு சென்றடைவதால் உபரிநீர் கால்வாயை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக தண்டோரா மூலம் நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உபரிநீர் திறப்பு
இதையடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் புழல் ஏரியின் இரண்டு ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு தலா 250 கனஅடி வீதம் மொத்தம் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரானது உபரிநீர் கால்வாய் வழியாக பாய்ந்து எண்ணூர் கடலை சென்றடைந்தது.
தண்ணீர் திறப்பின்போது பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் திலகம், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ஜெயகர்பிரபு, கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.
புழல் ஏரியில் இருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு உபரிநீர் திறந்து விடப்பட்டதால் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீர் திறப்பை வேடிக்கை பார்த்தனர். மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஷங்கர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அறிக்கை
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புழல் ஏரியில் இருந்து இன்று(நேற்று) மாலை 3 மணிக்கு மேல் முதல் கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும் என்பதால் கரையோரம், தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
செம்பரம்பாக்கம்
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்ததால் இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் 1,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிக்கு நேற்று காலையில் சுமார் 6 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் மதியத்துக்கு மேல் உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக மேலும் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரி முத்தையா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் திறந்து விடப்படும் என்றும், கனமழை நின்றுவிட்டால் ஏரியில் 23 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலை துண்டிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அதிகளவில் திறந்து விடப்படுவதால் ஏரியின் அனைத்து பகுதிகளும் மூடப்பட்டது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 22.30 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,189 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 3 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரித்ததால் குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மீண்டும் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீண்டும் போக்கு வரத்து வசதியின்றி அவதிக் குள்ளாகினர். இந்த சாலை வழியாக வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்படவில்லை.