குடகு, சிவமொக்காவில் நடந்த விபத்துகளில் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலி
குடகு, சிவமொக்காவில் நடந்த விபத்துகளில் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
சிவமொக்கா,
குடகு மாவட்டம் மூர்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 45). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(42). இருவரும் நண்பர்கள். இருவரும் குடகு மாவட்டத்தில் உள்ள காபி தொழிற்சாலையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களை தினமும் தொழிற்சாலையில் இருந்து வேன் வந்து அழைத்துச் செல்லும்.
அதேபோல் நேற்று காலையில் இவர்கள் வேலைக்கு புறப்பட்டனர். அவர்களை தொழிற்சாலையில் இருந்து வந்த வேன் அழைத்துக் கொண்டு புறப்பட்டது. அந்த வேனில் ஹரீஷ், சுப்பிரமணியுடன் இன்னும் பலர் இருந்தனர்.
அந்த வேன் குடகு மாவட்டம் மடிகேரி அருகே பேத்ரி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக அந்த வேன் மீது நேருக்கு நேராக மோதியது. கார் மோதிய வேகத்தில் வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. மேலும் காரும், வேனும் பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் வேனில் பயணித்து வந்த ஹரீஷ், சுப்பிரமணி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதேபோல் கார் டிரைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுபற்றி அறிந்த மடிகேரி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஹரீஷ், சுப்பிரமணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மடிகேரியில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அது போல் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (19) மற்றும் தருண்(19). இவர்கள் 2 பேரும் தங்களது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து பெங்களூருவில் இருந்து கோவாவுக்கு காரில் சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் இரவு கோவாவில் இருந்து மீண்டும் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். காரை தருண் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சித்தாப்புரா வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் பக்கவாட்டுப் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இதில் காரை ஓட்டி வந்த தருணும், ராஜேசும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்ற 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் சிவமொக்கா டவுனில் உள்ள மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பத்ராவதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான தருண், ராஜேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மெக்கான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.