களக்காடு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் துணை இயக்குனர் அன்பு தகவல்

களக்காடு புலிகள் காப்பகத்தில் தலையணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என்று அதன் துணை இயக்குனர் அன்பு கூறினார்.

Update: 2020-12-04 22:45 GMT
களக்காடு, 

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனராக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ் சேவியர் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை வன ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளங்கோ, அந்த பொறுப்பை வகித்து வந்தார்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வந்த அன்பு, களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்கள் செல்போனில் நுழைவு கட்டணம் செலுத்த ஏதுவாக புதிய செயலி ஏற்படுத்தப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் சோதனை சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. போக்குவரத்து நெருக்கடியும் தவிர்க்கப்படும்.

வனப்பகுதியில் உள்ள ஆன்மிக தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். களக்காடு புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். வன குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். வன குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வன வளத்தை மேம்படுத்தவும், வன பாதுகாப்பை பலப்படுத்தவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது களக்காடு வனச்சரகர் பாலாஜி உடனிருந்தார்.

மேலும் செய்திகள்