குன்னூர் அருகே, 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
குன்னூர் அருகே 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். பின்னர் குன்னூர் அருகே உள்ள உபதலை சமுதாய கூடத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. அதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் உள்பட 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் 15 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 681 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தொழிற்பயிற்சி முடித்த 15 பேருக்கு சான்றிதழ்களையும் கொடுத்தார். அப்போது மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற வந்த கேத்தி அச்சனகல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 6) என்ற சிறுவனிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை புரெவி புயலின் தாக்கம் அதிகமாக இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மீட்பு பணிகளை செய்ய தயார் நிலையில் குழுவினர் உள்ளனர். புரெவி புயல் காரணமாக மழை பெய்யும். ஆனால் தீவிர மழையாக இருக்காது. மழை மற்றும் காற்று அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்.