சேலத்தில் ஆட்டோவில் கடத்திய ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
சேலத்தில் ஆட்டோவில் கடத்திய ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பஜார் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ மற்றும் 10 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.
அதைத்தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள், சேலம் கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருள்குமார் (வயது 29), சேலம் டவுன் பெரியார் தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து, அருள்குமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் மூலம் கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த அந்த நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.