வடலூரில் பரபரப்பு: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் பறிமுதல்

வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-12-04 10:00 GMT
வடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் ஆவணங்களில் கையெழுத்து போடாமல் பொதுமக்களை அலைக்கழித்து வருவதாகவும் பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்றது.

இதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜசிங், இன்ஸ் பெக்டர்கள் சண்முகம், செல்வநாயகம், மாலா ஆகியோர் கொண்ட குழுவினர் வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் அறை கதவுகளை பூட்டி அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 9 மணி வரை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ.65 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.அந்த ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்