மதுரை போக்குவரத்து கழகத்தின் வருங்கால வைப்பு நிதி ரூ.349 கோடி வங்கிக்கணக்கில் இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம்
மதுரை போக்குவரத்துக் கழகத்தில் வருங்கால வைப்பு நிதியாக ரூ.349 கோடி கணக்கில் இருக்க வேண்டிய நிலையில் வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லை என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவித்துள்ளது.;
தாமதம்
விருதுநகர் மண்டலம் உள்ளடங்கிய மதுரை போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வரும் நிலை உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோர்ட்டை நாடுகின்றனர்.
கோர்ட்டு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து பல ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. பணப் பலன்கள் கிடைக்காமல் பல ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பணம் இல்லை
இந்த நிலையில் இதுபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை போக்குவரத்து கழகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. போக்குவரத்துக் கழக வருங்கால வைப்பு நிதி துணை மேலாளர் இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில் கடந்த மார்ச் மாத இறுதிவரை வருங்கால வைப்பு நிதி ரூ.349 கோடி புத்தக இருப்பாக கணக்கில் உள்ளது. ஆனால் வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றும், போக்குவரத்து கழகத்தின் வரவை விட செலவினங்கள் அதிகமாகி நிதி நெருக்கடியில் இருப்பதால் மேற்படி தொகை புத்தக இருப்பாக மட்டுமே உள்ளது என்றும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அரசிடமிருந்து நிதி உதவிகள் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களின் நலன் கருதி சேமிக்கப்படும் தொகை என்பதால் இந்த தொகை போக்குவரத்துக் கழக நிர்வாகத்தால் செலவிடப்படுகிறது என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள தொழிலாளர் நல ஆர்வலர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை 484 பஸ்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என கருதி ஸ்கிராப் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.