ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வைகை தண்ணீர் திறப்பு
ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வைகை தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை தண்ணீர்
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கடந்த 30-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் 3-ந் தேதி மாலை பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. நேற்று காலை அங்கிருந்து ராமநாதபுரம் - சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ. முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. மணிகண்டன் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் அந்த தண்ணீரை விவசாயிகளும், பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர்.
தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி பாய்ந்து சென்றது. பின்பு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபரிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பாசன பரப்பு
தற்போது பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்த தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விடப்பட்டுஉள்ளது. இதன் மூலம் 67 ஆயிரத்து 838 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் மதன சுதாகர், உதவி செயற்பொறியாளர் நிறைமதி, பொறியாளர் லதா, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கார்த்திக், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, நாகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், அண்ணா தொழிற்சங்கம் முருகன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தாமரைச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுரைவீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.