தரைப்பாலத்தில் பயணம் செய்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வேனில் இருந்த 5 பேர் பத்திரமாக மீட்பு
கும்மிடிப்பூண்டி அருகே தரைப்பாலத்தில் பயணம் செய்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சரக்கு வேனில் பயணம் செய்த டிரைவர் உள்பட 5 பேரை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இருந்து அட்டை பெட்டிகளை ஏற்றி கொண்டு நேற்று சித்தராஜகண்டிகை கிராமம் வழியாக கோபல் ரெட்டி கண்டிகை கிராமத்திற்கு மினி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் செஞ்சியை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் (வயது 55), திருவண்ணாமலையை சேர்ந்த அஸ்கர் (18), ஒடிசாவை சேர்ந்த சப்ஜீவ் (22) , சிவா (22) சிண்டு (23) ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் சித்தராஜகண்டிகை கிராமத்தில் அதிக அளவில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்த தரைப்பாலத்தில் வேன் செல்லும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தரைப்பாலத்தின் பக்கவாட்டில் வேன் எதிர்பாராதவிதமாக சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
5 பேர் தவிப்பு
இதனால் வெள்ளத்தில் மூழ்கிய வேன் நாகராஜகண்டிகை தரைப்பாலம் நோக்கி அடித்து செல்லப்பட்டது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வேனின் மீது 4 பேரும், அருகே உள்ள மரக்கிளையை பிடித்தவாறு ஒருவரும் என மொத்தம் 5 பேரும் வெள்ளத்தில் சிக்கி தவித்தவாறு கூச்சலிட்டனர்.
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த சித்தராஜகண்டிகை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் முரளி, கிராம மக்களுடன் சேர்ந்து கயிறை கொண்டு மீட்பு நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டார். முதலில் மரக்கிளையை பிடித்து கொண்டிருந்த நபரையும், அதன் பின்னர் வேனின் மேற்கூரையில் தவித்து கொண்டிருந்த 4 பேரையும் பத்திரமாக அவர்கள் மீட்டனர். உயிர்தப்பிய 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.